ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி89372734
ஸ்டான்லி ஆஸ்பத்திரி கல்லூரி விடுதியில் முன்னாள் மருத்துவ மாணவர் தற்கொலை - டாக்டராக முடியாததால் விரக்தி
சென்னை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த மேற்கு காட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவருடைய மகன் குமரவேல்(வயது 26). இவர், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரியில் 2013-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்தார்.
மருத்துவ படிப்பு காலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்ட நிலையில் 2 பாடங்களில் குமரவேல் தேர்ச்சி பெறவில்லை. இதனால் டாக்டராக முடியவில்லையே என்ற வருத்தத்தில் அவர் இருந்து வந்ததாக தெரிகிறது.
படிப்பு காலம் முடிந்ததும் சொந்த ஊருக்கு சென்ற குமரவேல், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மனநல சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் மருத்துவ கல்லூரியில் சேரும் போது கொடுத்த பள்ளி சான்றிதழ்கள் திரும்ப பெறுவதற்காக தனது தந்தை ஜெய்சங்கருடன், 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
நேற்று முன்தினம் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதிக்கு குமரவேல் சென்றார். அங்கு நண்பர்களை பார்த்துவிட்டு கழிவறைக்கு சென்றவர், நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை அங்கு சென்று பார்த்தபோது, தனது மகன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி சென்னை ஏழுகிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஏற்கனவே 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் தான் டாக்டராக முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்த குமரவேலு, மீண்டும் விடுதியில் உள்ள தனது நண்பர்களை பார்த்தவுடன் மேலும் விரக்தி அடைந்து அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments
Post a Comment